ஒளிப்படம்

ஒளிப்படம் (Photograph) என்பது, பொருட்கள் தாம் வெளிவிடுகின்ற அல்லது அவற்றின் மீது தெறித்து வருகின்ற ஒளியினால், ஓர் ஒளியுணர் மேற்பரப்பில் அப்பொருளின் ஒளியுருவை அல்லது தெறியுருவை அல்லது விம்பத்தைப் பதிவித்த படத்தைக் குறிக்கும். இது புகைப்படம் அல்லது நிழற்படம் ஆகிய சொற்களாலும் குறிப்பிடப்பிடப் படுகின்றது. மேற்குறித்த ஒளியுணர் மேற்பரப்பு வேதிப்பொருள்களால் பூசப்பட்ட ஒளிப்படத் தகடாகவோ, ஒளியால் தூண்டப்பெறும் மின்ம உணரியாகவோ இருக்கலாம். பெரும்பாலான ஒளிப்படங்கள், சிறு பெட்டி போன்ற ஒளிப்படக் கருவிகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. ஒளிப்படக் கருவியின் ஆங்கிலச் சொல்லான காமிரா அல்லது கேமரா (camera) என்பதன் பொருள் (சிறு) அறை (பெட்டி) என்பதாகும். ஒளிப்படக் கருவிகள் ஒரு காட்சியிலிருந்து வரும் ஒளியை வில்லைகள் மூலம் குவித்து ஒளியுணர் மேற்பரப்பில் விழச் செய்வதன் மூலம் அக் காட்சியின் ஒளிப்படத் தெறியுருவை உருவாக்குகின்றன. இது பின்னர் பல்வேறு வழிமுறைகளின் வழியே தாள், அட்டை அல்லது வேறு பொருட்களில் நிலைத்து இருக்குமாறு பதிக்கப்படுகின்றன.

விளம்பரம்

Thamizh.org