அரசியல்

தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிகள் தேர்ந்து எடுக்கப் படுகின்றனர்.
தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன.காங்கிரஸ் கட்சி,அகில இந்திய பார்வார்டு பிளாக்,பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி,விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.
ஈ.வெ.ராமசாமி (தந்தை பெரியார் என்று அறியப்படுகிறார்) 1944இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை (தி.மு.க, D.M.K) சி. என். அண்ணாதுரை தோற்றுவித்தார். 1947இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ் நாட்டை காங்கிரஸ் கட்சி ஆண்டது.1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (A.D.M.K,அ.தி.மு.க) ம. கோ. இராமச்சந்திரன் [M.G.R] தோற்றுவித்தார். 1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது.
அகில இந்திய பார்வார்டு பிளாக் ஆரம்பிக்கப்பட்ட 1939 முதல் 1963 வரை முத்துராமலிங்க தேவர் அதன் தமிழக தலைவராக இருந்தார். 1967 முதல் 2011இல் கடைசியாக நடந்த சட்ட மன்ற தேர்தல் வரை தி.மு.க அல்லது அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று (அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள்) பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன.தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உண்டு என்றாலும், இது வரை தனிக் கட்சி ஆட்சியே நடை பெறுகிறது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும் பங்கேற்கவும் செய்கின்றன.
தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு,தாழ்த்தப்பட்டோர் மற்றூம் சிறுபான்மை சமூகத்தின் நலன், இட ஒதுக்கீடு, காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்சினை, விவாசாயிகள், பாமரர் மற்றும் நலிவடைந்த பிரிவினர் நலன், ஊழல் ஆகியவை தமிழ் நாட்டு அரசியலில் முக்கியத்துவம் உள்ளவை.

விளம்பரம்

Thamizh.org