பேசும் படம்

தமிழில் பேசும்படம் தயாரிக்கும் முதல் முயற்சி மும்பையிலுள்ள "சாகர் மூவிடோன்" என்ற நிறுவனத்தால் 1931 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. "குறத்திப் பாட்டும் டான்ஸூம்" என்ற நான்கு ரீல்கள் (அடிகள்) கொண்ட குறும்படமே தமிழில் முதன்முதலில் வெளி வந்த பேசும் படம். அதே வருடம் "எச். எம். ரெட்டி' இயக்கத்தில் முழுநீள தமிழ்ப் படமான "காளிதாஸ்" வெளிவந்தது.
முதல் நான்கு ஆண்டுகளில் தமிழ்த் திரைப்படங்கள் மும்பையிலும், கொல்கத்தாவிலுமே தயாரிக்கப்பட்டன. சென்னையில் ஒலிப்பதிவு தொழில் நுட்ப வசதிகள் அற்ற அவ்வாண்டுகளில் 1934 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் முதல் பேசும் பட தயாரிப்பு நிறுவனம் நிறுவப்பட்டது.ஒரே காட்சியில் இருவர் தோன்றும் துருவா (1935) திரைப்படத்தில் நவீனத் தொழில்நுட்பம் முதல் முதலாக கையாளப்பட்டது. அத்திரைப்படத்தில் சிவபாக்கியம், ஒரு ராணியாகவும்,கைரேகை பார்க்கும் குறத்தியாகவும் ஒரே காட்சியில் தோன்றியது குறிப்பிடத்தக்கது.
முதல் ஐந்து ஆண்டுகளில் தமிழ்த் தமிழ்ப்படங்கள் புராணக்கதைகளினை மையமாக வைத்து வெளிவந்தன. அதிலும், நிறுவன நாடகங்கள் மூலம் பிரபலமாகி இருந்த இராமாயணம், மகாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்ட கதைகளே. இக்காலக்கட்டத்தில்தான் முதல் சமத்துவக் கதையொன்று தயாரிக்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டு சமத்துவக் கதைகளை கொண்ட மூன்று படங்கள் வெளிவந்தன. கௌசல்யா என்ற திகில் படமும் இதையடுத்து, வடுவூர் துரைசாமி அய்யங்காரின் நாவலான மேனகா, டம்பாச்சாரி போன்றவை திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன.பின்னர் சமத்துவத் திரைக்கதைகள் கொண்ட திரைப்படங்கள் மற்றும் சில புராணக்கதைகளும் நாடகப்படங்களாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
1937 இல் வெளியான சிந்தாமணி ஒரே திரையரங்கில் ஒரு ஆண்டுக்கு மேல் ஓடிய முதல் தமிழ்ப்படம் என்ற புதிய சாதனை படைத்தது. 1939 ஆம் ஆண்டு வாஹினி, ஜெமினி நிறுவனங்கள் சென்னையில் அமைக்கப்பட்டன. தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்,தணிக்கை வாரியம் காவல்துறை ஆணையாளர்களினால் செயல்பட்டது. 1918 ஆம் ஆண்டு ஆரம்பித்த தணிக்கை, சுதந்திரப் போராட்டத்திற்கு வலுவூட்டிய ஒத்துழையாமை இயக்க ஆண்டுகளில் கடுமையானதாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.சில படங்கள் தயாரிப்பு நிலையிலேயே கைவிடப்பட்டது. தேசியக் கருத்துக்களையோ, காந்தீய சமூக சீர்திருத்தங்களையோ ஆதரிக்கும் காட்சிகள் வெட்டப்பட்டன. ஆகவே , புராணக் கதைகளையும், மாயாஜாலக் கதைகளையுமே தயாரிப்பாளர்கள் விரும்பினர்.
சென்னை ராஜதானியில், 1937 முதல் 1939 வரை காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்தது. அப்போது தணிக்கை முறை விலக்கி வைக்கப்பட்டது. இக்காலக்கட்டத்தில்தான் தியாக பூமி,மாத்ருபூமி போன்ற நாட்டுபற்றைப் போற்றும் தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்தன. இத்திரைப்படங்களில் தேசியக் கருத்துகளும் அரசியல் பிரச்சாரமும் ஆங்கிலேயனௌக்குத் தெரியாவண்ணம் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், தணிக்கை நடைமுறையில் இல்லாததால் அந்தப் படங்களுக்கு வெளியே வந்தபோது பிரச்சனைகள் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இரண்டாம் உலகப் போரில்,ஆங்கிலேய அரசு இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் அரசுகள் விலகியபோது ஆங்கிலேய அரசு தியாகபூமி போன்ற படங்களுக்கு தடை விதித்ததும் குறிப்பிடத்தக்கது. போர்க்காலத்தில் கச்சாபிலிம் தட்டுபாடு காரணமாகத் திரைப்படங்கள் இயக்கப்படுவது வெகுவாகக் குறைந்தன.

விளம்பரம்

Thamizh.org