உடல் திறன் விளையாட்டு

உடற்றிறன் விளையாட்டு (Sports) என்பது, பெரும்பாலும் உடல் வலுவை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட விதிகள் அல்லது வழமைகளுக்கு இணங்கப் போட்டி அடிப்படையில் இடம்பெறும் செயற்பாடுகளைக் குறிக்கும். உடற்றிறன் விளையாட்டுக்களில் போட்டியாளர்களின் உடல் தகுதியே பெரும்பாலும் வெற்றி, தோல்விகளை முடிவு செய்யும் காரணியாக அமைகின்றது. சில சமயங்களில், உடல் தகுதி மட்டுமன்றி, மனவுறுதி, பயன்படுத்தும் கருவிகளின் செயற்றிறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தானுந்து ஓட்டப்போட்டிகள் போன்ற விளையாட்டுக்களும் உடற்றிறன் விளையாட்டுக்களுடன் சேர்த்துக் குறிப்பிடப்படுவது உண்டு. உடற்றிறன் விளையாட்டுக்கள், பொதுவாக விளையாட்டுக்கள் எனப்படும் செயற்பாடுகளின் ஒரு பகுதியாயினும் தமிழில் இதனை வேறுபடுத்திக் குறிப்பிடாமல் விளையாட்டு என்ற சொல்லாலேயே குறிப்பிடுவர்.
உடற்றிறன் விளையாட்டுக்கள், ஒழுங்கமைவு, போட்டி, திறன்களின் அடிப்படையில் அமைந்த உடற் செயற்பாடு என்பவற்றை இயல்புகளாகக் கொண்டிருப்பதுடன் இவற்றுக்கு நல்ல ஈடுபாடும், நேர்மையான நடத்தையும் வேண்டப்படுகின்றன.
உடற்றிறன் விளையாட்டுக்களின் வெற்றி தோல்விகள் தற்சார்பு அடிப்படைகளற்ற முறையில் செயற்பாடுகளை அளவிடுவதன் மூலம் முடிவு செய்யப்படுகின்றன. அழகுப் போட்டிகள், உடற்கட்டுப் போட்டிகள் போல உடல் அமைப்புக்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுவதில்லை.

விளம்பரம்

Thamizh.org